அடம்பிடிக்கும் கர்நாடகா: மேலும் தமிழகத்திற்கு தண்ணீர்
திங்கள், 19 செப்டம்பர் 2016 (18:22 IST)
தலைகீழாக நின்றாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கன்னட அமைப்பினர் ஒரு பக்கம் மறுத்தாலும், மறுபக்கம் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது வருகிற 21ஆம் தேதி முதல் மேலும் 10 நாட்களுக்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கர்நாடகா மாநிலத்தில் தமிழர்களை தாக்கினர். தமிழக கடைகள், உணவங்கள், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை தீயிட்டு எரித்தனர்.
இதற்கிடையே கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்று மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. கடந்த 12ஆம் தேதி இந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருகிற 20ஆம் தேதி வரை 12,000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து காவிரி மேற்பார்வை குழு கூட்டம் கடந்த 12ஆம் தேதி நடைப்பெற்றது. அதில் இரு மாநிலங்களும் தங்களுக்கு கிடைத்த நிரின் அளவு உள்ளிட்ட விபரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இன்று மீண்டும் டெலியில் மீண்டும் காவிரி மேற்பார்வை குழு கூட்டம் கூடியது.
கர்நாடகா மாநிலம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கர்நாடகத்தில் குடிநீருக்கே தண்ணீர் இல்லாத நிலையில் விவசாயத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று தெரிவித்தனர். தமிழக அதிகாரிகள் கர்நாடகா மாநிலம் தமிழகத்திற்கு தர வேண்டிய 64 டி.எம்.சி தண்ணீரை தந்தே தீர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் காவிரி மேற்பார்வை குழு இறுதியில், செப்டம்பர் 21ம் தேதி முதல் மேலும் 10 நாட்களுக்கு கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி வீதம் காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.