அருண் ஜேட்லியை சந்தித்த கோத்தபய ராஜபக்சே: இரு நாட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை

செவ்வாய், 21 அக்டோபர் 2014 (14:41 IST)
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை, இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபய ராஜபக்சே சந்தித்துப் பேசினார். இருவரும் இந்தியா-இலங்கை இடையேயான பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவுடன் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு பாதுகாப்புத்துறை சார்ந்த திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி, ஆயுதம், பயிற்சி ஆகியவற்றை இலங்கை அரசு பெற்று வருகிறது. நல்லெண்ண அடிப்படையில் நட்பு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் இந்தியாவில் உள்ள ராணுவ கல்லூரிகளில் படிக்கவும் மத்திய அரசு ஆண்டுதோறும் அனுமதி அளித்து வருகிறது.
 
இந்நிலையில், இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக டெல்லி வந்துள்ள இலங்கை அதிபரின் சகோதரரும் அந்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலருமான கோத்தபய ராஜபக்சே, பாதுகாப்புத்துறையைக் கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்துப் பேசினார்.
 
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, இரு தரப்பினரும் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு, மீனவர்கள் பிரச்சனை, கடற்படை ரோந்துப் பணிகளில் ஒத்துழைப்பு, இலங்கை, இந்திய சிறைகளில் வைக்கப்பட்டுள்ள மீனவர்களை பரஸ்பரம் விரைவாக விடுதலை செய்வது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
 
சந்திப்பு முடிந்து வெளியே வந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அருண் ஜேட்லியும் செய்தியாளர்களிடம் சந்திப்பு பற்றிய விவரங்களை வெளியிட மறுத்த நிலையில், இரு தரப்பினரின் சந்திப்பு குறித்த பாதுகாப்புத்துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ''இந்தியாவின் அழைப்பின்பேரில் டெல்லிக்கு கோத்தபய ராஜபக்சே வந்துள்ளார்.
 
இந்தியா-இலங்கை இடையிலான ராணுவ பயிற்சி, கடற்போர் பயிற்சி, இந்திய ராணுவ கொள்முதல் திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாக இருவரும் பேசினர். கடந்த வாரம் இரு நாட்டு கடற்படையினரும் நடத்திய கூட்டு ரோந்து தொடர்பான சந்திப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர். முதல் சந்திப்பு என்பதால் இந்த கூட்டத்தில் பாதுகாப்பு  உடன்படிக்கைகள் தொடர்பான அம்சங்களை இரு தரப்பும் விவாதிக்கவில்லை" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்