மத்திய அரசு செயல் இழந்து விட்டது: நாடாளுமன்றத்தில் சோனியா குற்றச்சாட்டு

புதன், 6 மே 2015 (19:07 IST)
மத்திய அரசு செயல் இழந்து விட்டதாகவும், ஓராண்டாக ஆட்சியில் உள்ள மோடி அரசு குறிப்பிடும்படி எதையும் செய்யவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் இன்று குற்றம் சாட்டினார்.
 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக அரசை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய மக்களவையில் சோனியா காந்தி பங்கேற்றார்.  அப்போது அவர் பேசுகையில்,
 
" நாட்டில் தற்போது அரசு இயந்திரம் தோல்வி அடைந்து விட்டது. ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் மோடி அரசு செயலற்ற நிலையில் உள்ளது. தற்போது ஒரு நபர் ஆட்சி நடந்து வருகிறது. பிரதமர் அலுவலகமே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது. அமைச்சர்களுக்கு எவ்வித அதிகாரமோ, சுதந்திரமோ கிடையாது. பிரதமரே நமது நாட்டை பற்றி வெளிநாட்டில் விமர்சனம் செய்தது இதுவே முதல்முறை. மகாத்மா காந்தியைக்  கொன்றவருக்கு இந்த ஆட்சியில் புகழாரம் சூட்டப்படுகிறது. இந்த ஆட்சியாளர்கள் இறுமாப்புடன் செயல்படுகிறார்கள்" என்று சோனியா காந்தி கூறினார். 
 
பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அவையை ஒத்தி வைக்க வேண்டும் என சோனியா காந்தி கோரிக்கை வைத்தார். இதற்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி மறுத்து விட்டார். முன்னதாக, மக்களவையில் கேள்வி எழுப்புவது குறித்து காங்கிரஸ் எம்பிக்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். கடந்த ஆட்சியின்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, முடங்கிய நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருப்பதாக குற்றம் சாட்டியது. இப்போது, பாஜக அரசு செயல்படாத நிலையில் உள்ளதாக சோனியா காந்தி தற்போது விமர்சனம் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்