சமூக போராட்டங்கள் நடத்த முதலாளிகளிடம் இருந்து பணம்?: அன்னா ஹசாரே மறுப்பு

வெள்ளி, 27 மார்ச் 2015 (10:02 IST)
சமூக போராட்டங்கள் நடத்துவதற்கு ஆதரவாக வெளிநாடுகளில் இருந்தும், முதலாளிகளிடம் இருந்தும் தனக்கு எந்தப் பணம் வரவில்லை என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். அவர் போராட்டம் நடத்துவதற்கு அவருக்கு வெளிநாடுகளில் இருந்தும், முதலாளித்துவ வர்க்கத்தினர்களிடமிருந்தும் பணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தன.
 
இந்த குற்றசாட்டுக்கு மறுப்பு தெரிவித்து அன்னா ஹசாரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
போராட்டங்கள் நடத்த வெளிநாடுகளில் இருந்தும், முதலாளிகளிடம் இருந்தும் எனக்கு பணம் வருகிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.
 
வெளிநாடுகளில் இருந்து எங்களது இயக்கம் பணம் பெறுகிறது என்பதை யாராவது நிரூபித்தால், நான் பொதுவாழ்வில் இருந்தே விலகி விடுகிறேன்.
 
நான் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களில் ஒரு பையை வைப்பேன். அதில் ரூ.5 முதல் 15 ரூபாய் வரை, உங்களால் முடிந்த பணத்தை போடுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் வைப்பேன். இவ்வாறாக சேர்த்த ஒவ்வொரு ரூபாய்க்கும் என்னிடம் கணக்கு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்