ஸ்மார்ட்போனில் பரவும் பாக்டீரியாக்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதன், 12 ஆகஸ்ட் 2015 (15:34 IST)
சுர்ரே பல்கலைக்கழக மாணவர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் பாக்டீரியாக்கள் பரவுவதை கண்டுபிடித்துள்ளனர்.
 

இப்போது பொதுவாக, அனைவரின் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. முக்கியமாக, செல்போனிலேயே இணையத்தளத்தை பார்வையிட ஸ்மார்ட்போன்தான் வசதியாக இருக்கிறது. ஆனால் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் பாக்டீரியாக்கள் பரவுவதை யாரும் அறிவதில்லை. இந்த விசயத்தைத்தான் சுர்ரே பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடுத்துள்ளனர். அதாவது, செல்போனை ஒரு மருத்துவக் கண்ணாடி குடுவைக்குள் வைத்து, அது எந்த அளவுக்கு பாக்டீரியாக்களை கிரகிக்கிறது என்று சோதனை செயதனர். அப்போது, ஸ்மார்ட்போனின் திரையில், நமது விரல் தொடும் இடங்களிலெல்லாம் பாக்டீரியாக்கள் அதிக அளவில் பரவியிருப்பதை கண்டுபிடித்துள்ள்னர்.

நம் உடலிலிருந்து வெளிப்படும் கிருமி மட்டுமில்லாமல், நாம் எங்கேயெல்லாம் செல்கிறோமோ, அங்கே உள்ள கிருமிகளும் நமது ஸ்மார்ட்போனில் பரவுகிறதாம். பொதுவாக, பாக்டீரியாக்கள், தும்பல், இருமல், தொடுதல்,வளர்ப்பு பிராணி,பூச்சிகள் மூலம் பரவினாலும், நீர் மற்றும் காற்றில் மூலம்தான் அதிக அளவில் பரவும். ஸ்மார்ட்போனை பறிமாறிக்கொள்வதன் மூலமாகவும் பாக்டீரியா நமது செல்போனில் பரவுகிறது என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

இதில், சந்தோஷமான விஷயம் என்னவென்றால், இந்த பாக்டீரியாக்களால் பெரிய தீங்கில்லை என்றும், ஆனால், செல்போனில் மூலம் பரவும் ஒரு சில பாக்டிரியாக்களால், அதாவது "ஸ்டாபிலோக்கஸ் ஆரியஸ்" என்ற பாக்டீரியாவால் தோல் நோய் மற்றும் சுவாசக்கோளாறுகள் ஏற்படுகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு இரண்டு முறையாவது, நமது ஸ்மார்ட்போனை சுத்தம் செய்வதன் மூலம், இந்த பாக்டீரியாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்