வெடிவிபத்து நடந்த இடத்தில் சிவராஜ் சிங் சவுகான் நேரில் ஆய்வு

ஞாயிறு, 13 செப்டம்பர் 2015 (13:07 IST)
மத்தியப் பிரதேசத்தில்  வெடிவிபத்து நடைபெற்ற இடத்தை முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
 
மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்துக்கு உட்பட்ட பெட்லவாட் நகர் பஸ் நிலையத்துக்கு அருகே ராஜேந்திர கசாவா என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடம் இருந்தது.
 
வெடிபொருட்களை பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்றிருந்த ராஜேந்திரன் அதனை தன் கட்டிடத்தில் சேமித்து வைத்திருந்தார். மூன்று மாடி கட்டிடத்தின் தரைதளத்தில் இரண்டு கடைகள் செயல்பட்டு வந்தன. இந்தப் பகுதி நகரின் முக்கிய பகுதி என்பதால், எப்போதுமே மக்களின் நடமாட்டம் இங்கு அதிகமாகவே இருக்கும்.



 

 
 
இந்நிலையில் நேற்று காலை 8.15 மணி அளவில் அந்த கட்டிடத்தினுள் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
 
இதனால் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த ஓட்டல் மற்றும் வீடுகளுக்கும் பரவியது. இதில் ஓட்டலில் இருந்த கியாஸ் சிலிண்டர்களும் அடுத்தடுத்து வெடித்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் அதிர்ந்தது.
 
இந்த விபத்தில் உடல் சிதறியும், தீயில் கருகியும், இடிபாடுகளில் சிக்கியும் 90 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
 
 
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு  50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.
 
இந்த கொடூர விபத்து நிகழ்ந்த இடத்தை மத்தியப் பிரதேசம் மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று நேரில் பார்வையிட்டார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்