நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் ஒரு தொகுதியில் இருந்து ராகுல் காந்தி விலக வேண்டிய நிலை உள்ளது.
முன்னதாக ரேபரேலி தொகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தனது சகோதரி என் பேச்சைக் கேட்டு வாராணசி தொகுதியில் நின்றிருந்தால், 3 முதல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடியை தோற்கடித்திருப்பார் என தெரிவித்திருந்தார்.
இதனால் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரவேசத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. பிரியங்கா காந்தியை வரவேற்று வயநாடு தொகுதியில் ஏற்கனவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததோடு, அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.