பேய் ஓட்டும் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி

வெள்ளி, 9 அக்டோபர் 2015 (19:51 IST)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்கள் பேய், பிசாசு மற்றும் மூடநம்பிக்கையில் அதிக பற்று கொண்டவர்கள். ஜார்க்கண்ட் மக்களின் மூடநம்பிக்கையை அங்குள்ள மந்திரவாதிகள் தங்கள் சுய லாபத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
 

 
நோயினால் பாதிக்கப்படும் பெண்கள், பேயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மந்திரவாதிகள் கூறி அவர்கள் அடித்து உதைத்து சித்ரவதை செய்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில் மந்திரவாதிகளால் 1500 பெண்கள் அடித்துக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
 
இந்நிலையில், மந்திரவாதிகள் அங்குள்ள பழமு பகுதியில் புதன்கிழமை பேய் ஓட்டும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இதில் 2 ஆயிரம் பேர் திரண்டனர். இந்த நிகழ்ச்சியில் மந்திரவாதி பெண்களை அடித்து கொடுமைப்படுத்துவதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
 
உடனே காவலர்களும், இந்திய ரிசர்வ் காவலர்களும் அங்கு விரைந்து சென்று மந்திரவாதியை கைது செய்ய முயன்றனர். அப்போது காவலர்களுக்கும், அங்கிருந்த மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அவர்கள் காவலர்கள் மீது கற்களை வீசி தடியால் தாக்கினார்கள்.
 
மேலும் காவலர்கள் கையில் இருந்த துப்பாக்கியை பறிக்க முயன்றனர். இதனால் காவலர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து ரபீக் அன்சாரி என்பவர் இறந்தார். குண்டடி பட்டு 6 பேர் காயம் அடைந்தனர். காவலர்கள் உள்பட மொத்தம் 15 பேர் காயம் அடைந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்