ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய தயார்: ஷீலா தீட்சித் அறிவிப்பு

ஞாயிறு, 20 ஜூலை 2014 (10:47 IST)
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கேரள மாநில ஆளுநர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார்.

பாஜக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அதன்பிறகு அந்த அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

குறிப்பாக முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட சில ஆளுநர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது. இதனால் சில மாநில ஆளுநர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். சில கவர்னர்கள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டனர்.

டெல்லி முன்னாள் முதலமைச்சரான ஷீலா தீட்சித் தற்போது கேரள மாநில ஆளுநராக பணியாற்றி வருகிறார். இவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவர் ஆவார்.

இதனால் ஷீலா தீட்சித் கேரள ஆளுநர் பதவியில் இருந்து மாற்றப்படலாம் அல்லது அவர் ராஜினாமா செய்வார் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

கடந்த வாரத்தில் டெல்லி சென்ற ஷீலா தீட்சித் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஷீலா தீட்சித் கூறினாலும், அவர் எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யலாம் என்ற பரபரப்பு மேலும் அதிகமானது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் ஆளுநர் ஷீலா தீட்சித்தும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு வந்திருந்தார்.

அப்போது நிருபர்களிடம் பேசிய ஷீலா தீட்சித், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயாராக உள்ளேன். அதே சமயம் எந்த விதமான நெருக்கடிக்கும் நான் பணிய மாட்டேன்.

மத்திய அரசிடம் இருந்து ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யும்படி அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் எனது மனசாட்சிப்படி முடிவு எடுப்பேன் என்று ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்