ஷீலா தீட்சித் தொடர்ந்த வழக்கில் அவருக்கே ரூ.3 லட்சம் அபராதம்: நீதிமன்றம் நடவடிக்கை

ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2014 (09:33 IST)
பாஜகவை சேர்ந்த விஜேந்திர குப்தா மீது ஷீலா தீட்சித் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராகாததால் ஷீலா தீட்சித்துக்கு ரூ3 லட்சம் அபராதம் விதித்தது டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம்.

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலின்போது தன்மீது அவதூறு கூறியதாக குப்தா மீது வழக்கு தொடர்ந்தார் ஷீலா தீட்சித். இந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் கடந்த முறை 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரியில் அந்த தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினார் ஷீலா தீட்சித். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆகஸ்ட் 30 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஷீலா தீட்சித் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு குப்தா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி ரூ.3 லட்சம் அபராதம் விதித்தார். இதில் ரூ.2 லட்சத்தை டெல்லி மாநில சட்ட சேவை ஆணையத்துக்கும், ரூ.1 லட்சத்தை குப்தாவுக்கும் அளிக்க உத்தரவிடப்பட்டது.

வழக்கு வரும் டிசம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் ஷீலா தீட்சித் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்