மும்பை தாக்குதல் : இன்று 7 ஆம் ஆண்டு நினைவு தினம்

வியாழன், 26 நவம்பர் 2015 (12:19 IST)
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றோடு ஏழு வருடங்கள் முடிவடைவதை ஒட்டி இன்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.


 
 
26.11.2008 அன்று பாகிஸ்தானின் லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த சில தீவிரவாதிகள், கடல் வழியாக ரகசியமாக ஊடுருவி, மும்பையில், சி.எஸ்.டி., காமா ஆஸ்பத்திரி, தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்டு கேபே ஓட்டல், ஒபராய் டிரெடெண்ட் உள்ளிட்ட இடங்களில் கொடூர தாக்குதல் நடத்தினர். 
இந்த தாக்குதலில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
இதில், மும்பை தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட 8 போலீஸ் அதிகாரிகள், வெளிநாடுகளை சேர்ந்த 28 பேர் அடங்குவர். தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 308 பேர் காயம் அடைந்தனர்.
 
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். அஜ்மல் கசாப்பிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு மும்பை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. புனே எரவாடா ஜெயிலில் 2012 ஆம் ஆண்டு அவன் தூக்கிலிடப்பட்டான்.
 
மும்பையை அதிர்ச்சியடைய செய்த, அந்த சம்பவம் நடந்து இன்றோடு ஏழு வருடங்கள் முடிவடைகிறது. அதனால் இன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதில், தீவிரவாத தாக்குதல் நடந்த இடங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதையொட்டி மும்பையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்