காஷ்மீர் பேரணியில் பாகிஸ்தான் கொடி: பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் கைது

வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (10:38 IST)
காஷ்மீரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் கொடிகளை ஏந்தியபடி வந்த விவகாரத்தில் பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
 
காஷ்மீர் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி, சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலம் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் நேற்றுமுன்தினம் பங்கேற்ற பேரணியில், பாகிஸ்தான் கொடிகளுடன் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு பலத்த கண்டனம் எழுந்தது. இதனால், இருவர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 
இந்நிலையில், ராணுவத்தால் 2 இளைஞர்கள் சுட்டு கொல்லப்பட்டதாக கூறி, புல்வாமா மாவட்டம் திரால் நகரில் இன்று நடக்கும் பேரணிக்கு கிலானி செல்ல திட்டமிட்டு இருந்தார். அதை தடுத்து சட்டம் – ஒழுங்கை காக்கும் நடவடிக்கையாக, அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதைத் தொடர்நது, அவரது வீடு முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, 'திரால் நகரில் பேரணி வெற்றிகரமாக நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே எங்களை வீட்டுக் காவலில் வைத்து உள்ளனர்' என்று மசரத் ஆலம் தெரிவித்துள்ளார்.  இதேபோல, கிலானி வீட்டிற்கு வெளியேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் நலின் கோக்லி, ஆலம் கைது செய்யப்பட்டதில் எங்களுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை, தேசத்திற்கு எதிரான எந்தஒரு நடவடிக்கைக்கும் அனுமதி அளிக்கப்படாது என்பதில் பாஜக மிகவும் தெளிவாக உள்ளது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்