ஜெயலலிதாவையும், சசிகலாவையும் பிழிந்தெடுத்த நீதிபதிகள்!

புதன், 15 பிப்ரவரி 2017 (01:58 IST)
குற்ற நடவடிக்கைகளிலிருந்து காத்துக் கொள்ளவே சசிகலாவை போயஸ் தோட்ட இல்லத்தில் இடம்கொடுத்து ஜெயலலிதா வைத்திருந்தார் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.


 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து ஜெயலலிதா, வி.கே.சசிகலா உள்ளிட்ட நால்வரையும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் பல்வேறு வகையில் கடுமையான வார்த்தைகளை அவர்கள் தங்களின் தீர்ப்பில் முன்வைத்துள்ளனர். அதில், “ஜெயலலிதா ‘மனிதர்களை நேசிக்கும் கொடைப்பண்பு’ காரணமாக, போயஸ் தோட்டத்தில் சசிகலாவுக்கு இடம் கொடுக்கவில்லை; மாறாக குற்ற நடவடிக்கைகளிலிருந்து காத்துக் கொள்ளவே சசிகலாவிற்கு இடம்கொடுத்து ஜெயலலிதா வைத்திருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “1991-ல் குற்றம்சாட்டப்பட்டோரின் சொத்துகள் மதிப்பு ரூ.2.01 கோடி. அதே நபர்களின் 1996-ஆம் ஆண்டைய சொத்து மதிப்பு ரூ. 66.44 கோடியாக பல்கிப் பெருகியுள்ளது.

இந்த உண்மைகள் நமக்கு அறிவுறுத்துவதெல்லாம், பெரிய அளவில் சொத்துகளைக் குவித்து அவற்றை செயல்படாத பல நிறுவனங்கள் மூலம் மறைத்து சட்ட விரோத சொத்துக் குவிப்பை சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவி மேற்கொண்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

இது தவிர, ’இவர்கள் ஒரே நாளில் 10 நிறுவனங்கள் தொடங்கப்பட்டதையும், போயஸ் தோட்டத்தில் அனைவரும் இருந்து கொண்டிருக்கும் போது சசிகலா உள்ளிட்டோர் செய்த வேலைகள் தனக்கு தெரியாது என்று ஜெயலலிதா கூறியதையும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிபிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்