’உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறு’ - சவுமியா பலாத்கார வழக்கில் மார்கண்டேய கட்ஜூ காட்டம்

சனி, 17 செப்டம்பர் 2016 (03:27 IST)
கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் சவுமியா பலாத்கார வழக்கில் உச்சநீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கியுள்ளது என்று முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சவுமியா (23) என்ற இளம்பெண்  ஓடும் ரயிலில் இருந்து குதித்தபோதும், குற்றவாளி கோவிந்தசாமியும் கீழே குதித்து, தண்டவாளத்தில் படுகாயத்துடன் கிடந்த சவுமியாவை ஈவு இரக்கமின்றி கற்பழித்துள்ளார். அதில், சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இந்த வழக்கில் குற்றவாளி கோவிந்தசாமிக்கு திருச்சூர் விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதனையடுத்து, கோவிந்தசாமி  தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அடுத்து, கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு தள்ளுபடி ஆனதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
 
வழக்கை விசாரித் உச்சநீதிமன்றம், போதுமான சாட்சிகள், ஆதாரங்கள் இல்லை என்பதால் கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து 7 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.
 
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ”படுகொலை செய்யப்பட்ட சவுமியா பெண்களுக்கான தனிப்பெட்டியிலேயே தனிமையாக பயணித்துள்ளார் [அந்த பெட்டியில் வேறு எவரும் இல்லை].
 
எர்ணாகுளம் அருகில் சவுமியா இல்லம் அருகே ரயில் செல்கையில், குற்றவாளி கோவிந்தசாமி அந்தப் பெட்டிக்குள் நுழைந்து சவுமியாவை ரயில்பெட்டி சுவற்றில் முடியை பிடித்து 4, 5 முறை மோதியுள்ளார். பிறகு அவரை பலாத்காரம் செய்துள்ளார். கிட்டத்தட்ட சுயநினைவு இழந்த நிலையிலேயே அவன் விட்டுச் சென்றுள்ளான்.
 
சட்டத்தில், கொலை பற்றிய 300 ஐ.பி.சி பிரிவில் உள்ளவற்றை நீதிமன்றம் சரியாகக் கவனிக்கத் தவறிவிட்டது; மொத்தம் நான்கு பிரிவுகள் அதில் உள்ளன; அதில் முதல் பிரிவு மட்டும் கொலைக்கான உள்நோக்கம் தேவை என்பதை வலியுறுத்துகிறது; மற்ற மூன்று பிரிவுகளில் எந்தவொரு உள்நோக்கம் இல்லை என்றாலும் அது கொலைதான் என்று கூறுகிறது.
 
ஆனால் அவற்றை கவனிக்காமல் அளிக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பு வருந்தத்தக்கது; நீதிமன்றம் சட்டப்பிரிவு 300-ஐ கவனமாக அணுக வேண்டும்; இந்தத் தீர்ப்பானது திறந்த நீதிமன்றத்தில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்