காஷ்மீர் தாக்குதலை கண்டித்து பல தலைவர்களும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சானியா மிர்சாவிடம் இருந்து ஒரு இரங்கல் செய்தியோ, கண்டன அறிக்கையோ வெளிவரவில்லை என்பதை சில நெட்டிசன்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலடி தரும் வகையில் ஒரு நீண்ட விளக்கத்தை சானியா அளித்துள்ளார்.
பிரபலங்கள் என்றாலே தங்கள் தேசிய பற்றை காட்ட டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தீவிரவாத தாக்குதல்களை கண்டித்து பதிவு செய்ய வேண்டும் என பலர் விரும்புகின்றனர். அவர்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால் உங்களுடைய வெறுப்பு மற்றும் கோபத்தை வேறெங்கும் காட்ட வாய்ப்பு கிடைக்காததால், எங்களை போன்ற பிரபலங்கள் மீது காட்டுகிறீர்கள். தீவிரவாத தாக்குதல்களை பொதுவெளியில் கண்டிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது வீட்டு மொட்டை மாடி மீது நின்று கொண்டு தீவிரவாதத்திற்கு எதிராக கூவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. தீவிரவாதத்தை சமூக வலைதளங்களில் கூவிக் கூவி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தீவிரவாதம் எந்த வகையில் இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே. அதேபோல், தீவிரவாதத்தை பரப்புபவர்களும் வன்மையான கண்டனத்துக்குரியவர்களே.
சரியாக சிந்திக்கும் அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்தான். நான் எனது நாட்டுக்காக வியர்வை சிந்தி விளையாடுகிறேன். அப்படித்தான் எனது நாட்டுக்கு நான் சேவை புரிகிறேன். தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். நான் தற்போது அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறேன்' என்று சானியா மிர்சா கூறியுள்ளார்.