சாகித்ய அகாடமி விருதை திருப்பி கொடுப்பவர்களுக்கு சல்மான் ருஷ்டி ஆதரவு

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (20:44 IST)
மத்திய அரசைக் கண்டித்து சாகித்ய அகாடமி விருதை திருப்பிக் கொடுத்துவரும் எழுத்தாளர்களுக்கு சல்மான் ருஷ்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.


 

 
கன்னட எழுத்தாளர் கல்புர்கி, சமூக ஆர்வலர்கள் கோவிந்த் பன்சாரே,நரேந்திர தபோல்கார் ஆகியோர் கொலை செய்யப்பட்டது, உ.பி. மாநிலம் தாத்ரி கிராமத்தில் மாட்டிறைச்சி உண்டதாக இஸ்லாமிய முதியவர் இக்லாக், கொடூரமாக இந்துத்வ மதவெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களால் எழுத்தாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். 
 
இதற்கு நேருவின் உறவினரும், 1986 சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளருமான நயன்தாரா ஷேகல் தனது சாகித்ய அகாடமி விருதை மத்திய அரசிடம் திருப்பிக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கவிஞர் அசோக் வாஜ்பேயி மற்றும் உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸ் ஆகியோர் விருதை திருப்பிக்கொடுத்தனர்.
 
இதுவரை 25க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திருப்பிக்கொடுத்துள்ளனர். சாகித்ய அகாடமி பொதுக்குழுவில் இருந்த மூன்று எழுத்தாளர்கள் அந்த பதவியை விட்டு வெளியேறினர்.
 
இந்நிலையில் எழுத்தாளர்களின் அந்த செயலுக்கு பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியபோது “ ஜவஹர்லால் நேருவின் உறவினரும் எழுத்தாளருமான நயந்தாரா ஷகல் மற்றும் ஏராளமான எழுத்தாளர்களின் இந்த போராட்டம் வரவேற்கத்தகக்து. மதவாதப்போக்கு எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்க முயல்வதை ஏற்கமுடியாது” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்