தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகளை கொண்டு வருதல் தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதன், 8 ஜூலை 2015 (07:43 IST)
தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பின் கீழ் அரசியல் கட்சிகளை கொண்டு வர உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டவழக்கில், இது குறித்து பதில் அளிக்க மத்திய அரசு, தேர்தல் ஆணையம், கட்சிகள் ஆகியவற்றிற்கு நோட்டீசு அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 
ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:-
 
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையும், பொறுப்பேற்றலும் வேண்டும்.
 
அரசியல் கட்சிகள் நன்கொடை, பங்களிப்பு என்ற பெயரில், பெரும் அளவு நிதி பெறுகின்றன. ஆனால் தங்களுக்கு கிடைக்கிற நிதிக்கு ஆதாரம் எதையும் அவை கூறுவதில்லை.
 
தங்கள் வருவாய், செலவினம் குறித்து அனைத்து தேசிய, பிராந்திய கட்சிகள் கணக்கு தருவதை கட்டாயமாக்க வேண்டும். ரூ.20 ஆயிரத்துக்கு குறைவான நன்கொடை என்றாலும் அதற்கும் கணக்கு காட்ட வேண்டும்.
 
அனைத்து அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.
 
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் குமார் மிஷ்ரா, அமித்தவா ராய் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
 
அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிட்டார். அவர், "அரசியல் கட்சிகள், பொது அதிகார அமைப்புகள்தான். எனவே அவற்றை தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பின்கீழ் கொண்டு வரவேண்டும்.
 
நன்கொடைகளுக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. ரூ.20 ஆயிரத்திற்கு குறைவான நன்கொடைக்கு கணக்கும் தர வேண்டியதில்லை. இந்த அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற, சட்டசபைகளை கட்டுப்படுத்துகின்றன” என கூறினார்.
 
இதையடுத்து இந்த வழக்கில் பதில் அளிப்பதற்கு மத்திய அரசு, தேர்தல் ஆணையம், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு நோட்டீசு அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 
மத்திய தகவல் ஆணையம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில், அரசியல் கட்சிகள் பொது அதிகார அமைப்புகள் என்கிற நிலையில், கண்டிப்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்