ஆர் .எஸ். எஸ் பேரணி: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள், 6 நவம்பர் 2023 (14:00 IST)
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்போது உச்ச நீதிமன்றத்தில் ஏன் மேல்முறையீடு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, ஆர்.எஸ்.எஸ். தரப்பு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதால், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து உயர்நீதிமன்ற வழக்குகளின் ரோஸ்டர் அட்டவணையைத் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதன்படி, இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு வரும் 16 ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 19 ஆம் தேதிக்குள் பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், வரும் 19, 26 ஆகிய தேதிகளில் பேரணியை நடத்த விரும்புவதாக ஆர்.எஸ்.எஸ் தரப்பு தெரிவித்தது.
இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பேரணியை மட்டுமே நடத்தவும், பேரணி தொடர்பான பாதையை காவல்துறை தீர்மானிக்கவும் அதிகாரம் வேண்டும் என தமிழக அரசு கூறியது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு வரும் 16 ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.