பீகார் முதல்வருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் ஏன்? டெல்லி ஐகோர்ட் அதிரடி

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2017 (06:01 IST)
சமீபத்தில் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு பீகார் ஐகோர்ட் ஒரு வழக்கில் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.



 
 
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பி.எச்.டி மாணவர் அதுல் குமார் சிங் என்பவர் தனது ஆராய்ச்சியான  ‘பொருளாதார மாற்றத்தில் மாநிலத்தின் பங்கு: சக காலத்திய பீகார்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தார். தனது ஆராய்ச்சி பட்டத்திற்காக எழுதிய இந்த கட்டுரையை அவர் கடந்த 2009-ம் ஆண்டு ‘பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.
 
ஆனால் இந்த புத்தகத்தை புதிய பதிப்பு போல பாட்னாவில் உள்ள ஆசிய வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் உறுப்பினர் செயலாளர் ஷாய்பால் குப்தா என்பவர் வெளியிட்டார். இந்த புத்தகத்திற்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஒப்புதல் அளித்ததோடு அதில் அவர் தன்னுடைய கருத்துக்களையும் எழுதியிருந்தார்.
 
தன்னுடைய புத்தகம் வேறொரு வடிவில் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அதுல் குமார் சிங், நிதிஷ்குமார் ஆகியோர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது தனக்கும் இந்த புத்தகத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை என்றும் இதனால் இந்த வழக்கில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டும் என்று நிதிஷ் குமார் முறையிட்டார். 
 
ஆனால் நீதிமன்றம் அவருடைய கோரிக்கையை ஏற்காமல் நிதிஷ்குமாருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. ஒரு முதலமைச்சருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்