ரோஹித் வேமுல தற்கொலை: மத்திய அமைச்சர் மீது புகார்

செவ்வாய், 19 ஜனவரி 2016 (06:55 IST)
ஆந்திரப் பிரதேசத்தலைநகர் ஹைதராபாதில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோஹித் வேமுலா தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அந்த பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

ஹைதராபாதில் இருக்கும் மத்திய பல்கலைக்கழக வளாகத்திற்குள் இந்த ஆய்வு மாணவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் தங்கக்கூடாது என்று சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்ட ஐந்து தலித் மாணவர்களில் ரோஹித் வேமுலவும் ஒருவர்.

பல்கலைக்கழக தங்கும் விடுதியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து இந்த ஐந்து மாணவர்களும் தொடர்ந்து போராடி வந்தனர்.

ரோஹித் வேமுலவின் மரணத்துக்கு பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரியும், மத்திய அமைச்சரும் காரணம் என்று அவரது நண்பர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த மாணவர் மரணம் தொடர்பில் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் பல்கலைக்கழக உயரதிகாரிகளுக்கு ஏதேனும் பங்கிருக்கிறதா என்பது குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாக ஹைதராபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் தத்தாத்ரேயா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்கள் சிலர் இந்தியத் தலைநகர் டில்லியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தன் கட்சியைச் சேர்ந்தவரும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஸ்மிதா இரானியிடம் இந்த தலித் மாணவர்கள் மீது புகார் கொடுத்ததைத் தொடர்ந்தே இவர்கள் ஐவரும் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் இருந்து நீக்கப்பட்டதாக போராடும் மாணவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கைக்குப் பிறகு இந்த ஐந்து மாணவர்களும் தங்கும் விடுதி உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் மற்ற வசதிகளையும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மாணவர்கள் மத்தியில் ஆளும் பாஜகவின் மாணவர் அமைப்பின் கொள்கைகளை எதிர்த்து போராடி வந்தது அமைச்சர் தத்தாத்ரேயாவுக்கு பிடிக்கவில்லை என்றும் இந்த போராட்டக்காரர்கள் நம்புகின்றனர்.

ஆனால் தான் எழுதிய கடிதம் தலித் மாணவர்கள் பற்றியதல்ல என்று அமைச்சர் மறுத்திருக்கிறார்.

“சில சமூகவிரோத சக்திகள் பல்கலைக்கழகத்திற்குள் நிலவும் அமைதியான சூழலை கெடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியே நான் மத்திய மனிதவள அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினேன்”, என்று தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“இந்த தற்கொலைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது குறித்த விசாரணை அறிக்கை உண்மையை வெளியில் கொண்டுவரும்”, என்றும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்