பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு அதிக தண்டனை: டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்

திங்கள், 25 ஏப்ரல் 2016 (08:31 IST)
பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு அதிகப்படியான தண்டனை வழங்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.


 

 
டெல்லியிலுள்ள சீலம்பூர் நகரைச் சேர்ந்த தஞ்சீர் ஆலம் என்பவர் 2011 ஆம் ஆண்டு மே மாதம் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த செசன்சு நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிதானி, சங்கீதா டிங்ரா செகல் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. 
 
அந்த தீர்ப்பில், குற்றவாளிக்கு செசன்சு நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு தண்டனையை 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக அதிகரித்து உத்தரவிட்டனர்.
 
மேலும் நீதிபதிகள் கூறுகையில், இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நீதித்துறை கருணை காட்டக்கூடாது என்று தெரிவித்தனர்.
 
அவர்கள் அளித்த தீர்ப்பின் விவரம் வருமாறு:–
 
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. பாலியல் பலாத்காரம் என்பது மிகக் கொடிய குற்றமாகும்.
 
அது தனிப்பட்ட நபருக்கு எதிரான குற்றம் மட்டும் அல்ல. இந்த சமுதாயத்துக்கு எதிரான குற்றமும் கூட. எனவே அந்தவகை குற்ற வழக்குகளை கடுமையாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
 
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு உட்பட்டவர் என்பதால், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச தண்டனையை ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்