கடந்த பிப்ரவரி மாதம் கேரள நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து சில மலையாள நடிகைகளும் தங்களிடம் பலர் தவறாக நடக்க முயன்றதாக பகீரங்கமாக கூறி வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே நடிகை பார்வதி மேனன் உள்ளிட்ட சில நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலயில் சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகரும், எம்.பி.யுமான இன்னொசெண்ட் “மலையாள சினிமா உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் கிடையாது. இதுவரை எங்களுக்கு அப்படி எதுவும் புகார் வந்தது கிடையாது. மோசமான பெண்கள்தான் வாய்ப்பிற்காக படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள்” எனக் கூறினார். கேரள சினிமா உலகின் பிரபலமான நடிகர் இன்னொசெண்ட், மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்னொசெண்ட்டின் கருத்திற்கு தனது பேஸ்புக் அப்க்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை ரஞ்சனி “இன்னொசெண்ட் பேசியிருப்பது எனக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும், கண்ணீரையும் வரவழைத்துள்ளது. இந்த உலகத்தில் நாம் வாழ்கிறோமா என்பது தெரியவில்லை. இப்படி பேசியிருப்பதன் மூலம் அவர் எவ்வளவு அநாகரீகமானவர் என்பது தெரிகிறது. ஒரு அரசியல்வாதிக்குரிய எந்த தகுதியும் அவருக்கு இல்லை.
இது சினிமாவில் இடம்பெறும் ஒரு நகைச்சுவை காட்சி அல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். மாநில தலைமை போலீஸ் அதிகாரி, டிஜிபி மற்றும் கமிஷனர் ஆகியோர் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பெண்களை மோசமாக நடத்தும் நபர்கள் அரசியலிலும் இருக்கிறார்கள். எப்போது கேரள பெண்களுக்கு மரியாதை கிடைக்கும் எனத் தெரியவில்லை. இது மலையாள சினிமா உலகிற்கு கருப்பு தினமாகும். நம் சகோதரிக்கு (பாவனா) நியாயம் கிடைக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.