கர்நாடக அரசின் சதியை முறியடிக்க தனிக்குழு அமைக்க வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை!

வியாழன், 29 ஜூலை 2021 (16:05 IST)

கர்நாடகாவின் மேகேதாதுவில் அணைக்கட்டுவதை தடுக்க தமிழக அரசு தனிக்குழு அமைக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது சம்மந்தமான ராமதாஸின் அறிக்கை:-

"கர்நாடகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டபிறகு ஊடகங்களுக்கு அளித்த முதல் நேர்காணலிலேயே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கர்நாடக அரசு கட்டியே தீரும்; அதற்கு அனுமதி பெறுவதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை ஓரிரு நாட்களில் சந்திக்கவிருக்கிறேன் என்று பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஒருவர், தமிழகத்துடனான உறவை வலுப்படுத்த முயல்வதற்கு மாறாக சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையைக் கட்டிவிட வேண்டும் என்பதில், இதுவரை முதல்வராக இருந்த எடியூரப்பாவும், இப்போது முதல்வராகப் பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் உறுதியாக உள்ளனர். மேகதாது அணையைக் கட்டுவதற்காக அறத்துக்கு மாறாக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதைத் தமிழக அரசு புரிந்துகொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும்.

மேகதாது அணை கட்டப்பட்டால் அதுதான் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மிகப்பெரிய அணையாக இருக்கும். தொடக்கத்தில் ரூ.5,912 கோடி செலவில் 67.14 டிஎம்சி கொள்ளளவில் மேகதாது அணையைக் கட்டுவதற்கு திட்டமிட்ட கர்நாடக அரசு, 2019-ம் ஆண்டில் அணைக்கான மதிப்பீட்டை ரூ.9,000 கோடியாக உயர்த்தியது. மேகதாது அணையின் கொள்ளளவும் 70 டிஎம்சிக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டது. இது ஏற்கெனவே கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையின் கொள்ளளவான 49.45 டிஎம்சியை விட 42% அதிகம் ஆகும்.

இந்த அணையும் கட்டப்பட்டால் கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் அதிகாரபூர்வ கொள்ளளவு 184.57 டிஎம்சியாக அதிகரிக்கும். நீர்நிலைகளை இணைத்து சட்டவிரோதமாக கர்நாடக அரசு சேமித்து வைத்துள்ள 40 டிஎம்சி நீரையும் சேர்த்தால் மொத்தக் கொள்ளளவு 225 டிஎம்சியாக அதிகரித்துவிடும். அதன்பின், தமிழகத்துக்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்காது.

தமிழகத்துக்கு வரும் காவிரி நீரைத் தடுப்பது 1892-ம் ஆண்டில் சென்னை மாகாணத்துக்கும், மைசூர் மாகாணத்துக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கும், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கும் எதிரானது ஆகும். அதனால் மேகதாது அணைக்கு உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் அனுமதி அளிக்காது; அனுமதி அளிக்கவும் முடியாது. இதை உணர்ந்துகொண்ட கர்நாடக அரசு இப்போது புதிய தந்திரத்தைக் கையில் எடுத்துள்ளதுமேகதாது அணை பாசனத்துக்கான அணை இல்லை; பெங்களூரு மாநகரத்துக்குத் தண்ணீர் வழங்குவதற்கான அணை என்பதுதான் அந்த உத்தியாகும். கர்நாடகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை இந்தக் கருத்தை மீண்டும் கூறி உறுதி செய்திருக்கிறார். இதனடிப்படையில் தான் மத்திய அரசிடம் கர்நாடகம் அனுமதி கோரவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்