கனமழை காரணமாக ஆந்திராவில் ஏரி, குளங்கள் நிரம்பின: 5 பேர் உயிரிழப்பு

புதன், 18 நவம்பர் 2015 (08:35 IST)
ஆந்திர மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பியதால் மழை வெள்ளதால் பாதிக்கப்பட்டு  5 பேர் உயிரிழந்துள்ளனர்.


 

 
தமிழகத்தின் அருகே வங்க கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்தது.
 
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக ஆந்திராவில் நெல்லூர், சித்தூர், கடப்பா உள்ளிடட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
 
இந்த கனமழை காரணமாக, அங்குள்ள ஏரிகள், குளங்கள் ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
 
இதைத் தொடர்ந்து, வெள்ளம் பாதித்த பகுதிகளில், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த சுமார் 14 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், இந்த கனமழைக்கு சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மழைவெள்ள பாதிப்பால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திர முலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
 
மழை, வெள்ளத்தின் காரணமாக ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை-நெல்லூர் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்