’சூட்’ மற்றும் ‘பூட்ஸ்’ அணிந்தவர்களுக்கான அரசாங்கம் இது - ராகுல் காந்தி தாக்கு

செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (10:48 IST)
பெரிய கார்களில் பயணிப்பவர்கள்தான் சக்திவாய்ந்தவர்கள் என்று அரசாங்கம் கருதுகிறது. ‘சூட்’ மற்றும் ‘பூட்ஸ்’ அணிந்தவர்களுக்கான அரசாங்கம் இது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 
நேற்று பாராளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கடும் அமளிக்கு இடையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. பின்னர் இது குறித்து நடைபெற்ற இந்த விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் பங்கெடுத்துக் கொண்ட ராகுல்காந்தி மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

 
இது குறித்து பேசிய ராகுல் காந்தி “மத்திய அரசு விவசாயிகளின் நலனை புறக்கணித்து விட்டு தொழில் அதிபர்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படுகிறது. விவசாயிகள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள். அவர்கள்தான் தேசத்தின் முதுகெலும்பு.
 
ஆனால் அரசு, பெரிய கார்களில் பயணிப்பவர்கள்தான் சக்தி வாய்ந்தவர்கள் என கருதுகிறது. ‘சூட்’ மற்றும் ‘பூட்ஸ்’ அணிந்தவர்களுக்கான அரசாங்கம் இது. இந்த தேசத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தவர்கள் விவசாயிகள்தான். அவர்களால்தான் இந்த தேசத்தில் பசுமைப்புரட்சி ஏற்பட்டது.
 
ஆனால் மத்திய அரசு விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கடைபிடிக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு நல்லகாலம் பிறக்கும் என்று கூறினார்கள். ஆனால் அவர்களுடைய அரசாங்கம், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை கூட வழங்க தவறிவிட்டது. விவசாய கடன்களையும் வழங்கவில்லை.
 
விவசாய நிலங்களின் விலை மதிப்பு உயர்ந்து வருகிறது. உங்கள் கார்ப்பரேட் நண்பர்கள் அந்த நிலத்தை பெற விரும்புகிறார்கள். நீங்கள் விவசாயிகளை பலவீனப்படுத்தும் வகையிலும் தொழில் அதிபர்களுக்கு உதவும் வகையிலும் அவசர சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறீர்கள்” என்று கடுமையாக தாக்கிப் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்