3வது அணியை ஆதரிப்பதற்கு பதிலாக எதிர்க்கட்சி வரிசையில் அமரலாம் - ராகுல் காந்தி கருத்து?

வெள்ளி, 2 மே 2014 (16:45 IST)
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றால் எதிர்கட்சி வரிசையில் அமரலாம். அதற்காக 3வது அணியை ஆதரிக்கத் தேவையில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்க முடியவில்லையென்றால் 3வது அணியை ஆதரிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர். பிறகு 3வது அணியை ஆதரிக்கும் திட்டத்தில் சோனியா காந்தி இல்லை என்று தகவல் வெளியானது.
 
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் 3வது அணியை ஆதரிப்பதில்லை என்ற மன நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் பேசுகையில், அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:–
 
தேர்தலில் காங்கிரஸ் தனித்து ஆட்சியை பிடிக்க முடியாத சூழ்நிலை வந்தால், மத்தியில் பாஜக ஆட்சி அமைவதை தடுக்க 3வது அணிக்கு ஆதரவு கொடுக்கலாம் என்றனர். அதை ராகுல் ஏற்கவில்லை.
 
3வது அணியை ஆதரிப்பதை விட எதிர்க்கட்சி வரிசையில் அமரலாம் என்று ராகுல் காந்தி கூறினார். ராகுலின் மனதில் நாடெங்கும் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் நிர்வாக அமைப்பை மாற்றி, வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
 
மாநில காங்கிரஸ் நிர்வாகத்தை சீரமைக்க அவர் திட்டமிட்டுள்ளார். கூட்டாட்சியில் அவருக்கு நம்பிக்கை இல்லை. கூட்டாட்சியால் எப்போதும் நிலையற்ற தன்மையே காணப்படும். எனவே காங்கிரஸ் தரப்பில் உறுதியான, வலுவான அரசை ஏற்படுத்த வேண்டும் என்றே ராகுல் ஆசைப்படுகிறார்.
 
குறிப்பாக காங்கிரஸ் செல்வாக்கு இழந்த மாநிலங்களில் அவர் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். எனவே தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் நிர்வாக அமைப்பில் மிகப்பெரிய மாறுதல்களை எதிர்பார்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்