ராகுல் காந்திக்கு எதிரான சுப்பிரமணியன் சுவாமியின் புகாரை ஏற்க சபாநாயகர் மறுப்பு

வெள்ளி, 20 நவம்பர் 2015 (13:07 IST)
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அனுப்பிய கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.


 

 
கடந்த செவ்வாய்க்கிழமை பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
 
அந்த கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்ததாவது:–
 
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்தில் தனியார் நிறுவனம் ஒன்றைத் தொடங்கும் நோக்கில் அந்நாட்டு குடிமகன் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டுள்ளார்.
 
அதே நேரத்தில் இந்தியாவில் நடந்த மக்களவை தேர்தலில் அவர் தன்னை இந்தியக் குடிமகன் என்று குறிப்பிட்டு மக்களவை உறுப்பினராகி இருக்கிறார். இதன் மூலம் அவர் மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றியுள்ளார்.
 
மக்களவை உறுப்பினர் என்னும் முறையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறையை கடைப்பிடிக்க ராகுல் தவறி விட்டார். இது குறித்து அவரிடம் உரிய விளக்ம் கேட்க வேண்டும்.
 
இந்த குற்றச்சாட்டின் தன்மையை கருத்தில் கொண்டு மக்களவையின் நெறிமுறை தொடர்பான நிலைக்குழுவுக்கு அனுப்பி அவரை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.
 
இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கடிதத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பரிசீலனைக்கு ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
 
மக்களவை உறுப்பினராக உள்ள ஒருவருக்கு, மக்களவை நெறிமுறைகளுக்கான நிலைக் குழுவில்  மக்களவையில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே புகார் அளிக்க முடியும்.
 
சுப்பிரமணியன் சுவாமி மக்களவை உறுப்பினராக இல்லாததால், இந்தக் கடிதம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்