பஞ்சாப் தீவிரவாதத் தாக்குதல்: நடந்தது என்ன?

திங்கள், 27 ஜூலை 2015 (17:28 IST)
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் பேருந்து ஒன்றிலும், காவல் நிலையத்திலும் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தாக்கியதில் 6 பேர் பலியாகினர்.
 

 
இன்று அதிகாலை நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதலில் ஒரு காவல் அதிகாரி உட்பட 6 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
சுமார் 5 பேர் கொண்ட குழு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என நம்பப்படும் நிலையில், அவர்களைத் தேடும் பணியில் ராணுவம் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது.
 
இதனிடையே, இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆலோசிப்பதற்கு பிரதமர் மோடி அவசரமாக உயர் மட்ட கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
 
ஜம்மு - காஷ்மீர் வழியாக பஞ்சாப் செல்கின்ற அமிர்தசரஸ் - பதான்கோட் நெடுஞ்சாலையில் ஒரு காரில் அதிகாலை 5 மணியளவில் வந்திறங்கிய மர்ம நபர்கள், பேருந்து ஒன்றில் பயணிகளை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்தத் தாக்குதலில் 4 பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குர்தாஸ்பூர் காவல் துறை அதிகாரி குர்பிரீத் சிங் தெரிவித்தார்.
 
பின்னர், ராணுவ உடையில் இருந்த அந்த மர்ம நபர்கள், தினாநகர் காவல் நிலையத்துக்குல் புகுந்து, காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் பின்னர், போலீசாருக்கும் மர்ம நபர்களுக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டது.
 
இதையடுத்து, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்று ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். இதனிடையே, பஞ்சாப் காவல் துறை உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறைச் செயலர் எல்.சி.கோயல் ஆலோசனை நடத்தி, நிலைமையை கண்காணித்து வருகிறார்.
 
அதேவேளையில், பதான்கோட் - குர்தாஸ்பூர் ரயில் பாதையில் 5 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்தனர். ராணுவ கமாண்டோக்கள், அதிரடிப் படையும் சம்பவ இடத்துக்கு விரைந்தது.
 
பதான்கோட்டில் இருந்து வந்த ராணுவம், சம்பவம் நடந்த இடத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தாக்குதல் நடத்தியவர்களைத் தேடிப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
 
இதன் தொடர்ச்சியாக, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், வெடிகுண்டு நிபுணர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர் ஒருவேளை பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருக்கக் கூடும் எனக் கருதப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்