வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

Senthil Velan

திங்கள், 17 ஜூன் 2024 (20:56 IST)
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும் என வயநாடு மக்களை ராகுல் காந்தி கேட்டு கொண்டுள்ளார். 
 
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். 
 
14 நாட்களில் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை ராகுல்காந்தி அறிவித்துள்ளார். 
 
ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதி மக்களுமே என் மனதுக்கு நெருக்கமானவர்கள் என்றும் வயநாடு தொகுதி மக்களின் அன்பை மறக்க மாட்டேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவேன்' என அவர் கூறியுள்ளார்.
 
ராகுல்காந்தியின் முடிவை தொடர்ந்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
 
வயநாடு தொகுதியில் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு மக்களுக்காக கடினமாக உழைத்து நல்ல பிரதிநிதியாக செயல்படுவேன் என்றும் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இல்லை என்ற உணர்வே வரவிடமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.   

ALSO READ: பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் நாங்கள் இருவருமே தொடர்ந்து பிரதிநிதிகளாக இருப்போம் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்