ஆம் ஆத்மி கட்சி கட்டப் பஞ்சாயத்து இயக்கமாக மாறிவிட்டது - பிரசாந்த் பூஷண்

செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (18:09 IST)
ஆம் ஆத்மி கட்சி கட்டப் பஞ்சாயத்து இயக்கமாக மாறிவிட்டது என்று அக்கட்சியில் இருந்த நீக்கப்பட்ட பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
தனது நீக்கம் பற்றி குறித்து அவர் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சியின் அடித்தளத்தை அசைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்களை நீக்கியுள்ளனர். எங்களை நீக்கியவர்கள் மீது தான் மிகப்பெரிய குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த அளவுக்கு கட்சியின் தரம் தாழ்ந்துவிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. கட்சி தற்போது கட்டப்பஞ்சாயத்து இயக்கமாக மாறியுள்ளது. ஒருவரின் உத்தரவுக்கு ஒட்டுமொத்த இயக்கமும் தலையாட்டுகிறது.
 
தங்களது சுயமரியாதையை அடமானம் வைத்துவிட்டு சிலர், கெஜ்ரிவாலுக்கு காவடி தூக்க தயாராகிவிட்டனர்" என்றார். 
மேலும், டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே எங்கள் இருவரையும் நீக்குமாறு கெஜ்ரிவால் உத்தரவிட்டதாகக்  கூறியுள்ளார். இரண்டு மாதமாக எங்களை வெளியேற்றுவதற்காகவே திட்டமிட்டு இந்த நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர். தற்போது நாடகம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி என்றும்  பூஷண் தெரிவித்தார்.
 
முன்னதாக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறு பூஷண் மற்றும் யோகேந்திர யாதவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் நோட்டீஸ் அனுப்பியவர்களை யார் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நியமித்தார்கள் என்று கேள்வியை எழுப்பி இருவரும் பதில் கடிதம் எழுதினர். 
 
இதையடுத்து நேற்று இரவு நடந்த அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் பூஷண், யோகேந்திரா ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டதையடுத்து பூஷன் நீக்கப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்