5 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வெள்ளி, 11 மார்ச் 2016 (08:38 IST)
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


 

 
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் 5 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 
இது குறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:–
 
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு ரூ.8 ஆயிரம் கோடி செலவில் இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்படும்.
 
அந்த குடும்பங்களில் உள்ள பெண்கள் பெயரில் இந்த சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். 3 ஆண்டுகளில் இந்த இணைப்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும்.
 
சமையலுக்கு விறகு, வறட்டி, நிலக்கரி ஆகியவற்றை பயன்படுத்துவதால் பெண்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
 
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதன் மூலம் அவர்களுடைய சுகாதாரம் மேம்படும்.
 
சமையல் எரிவாயுவிற்கு மானியம் வழங்குவதால் நாட்டில் 16½ கோடி குடும்பங்கள் பயன் பெறுகின்றன. சமையல் எரிவாயு மானியம் பயனாளிகளின் வங்கி கணக்குக்கு தற்போது நேரடியாக வழங்கப்படுகிறது.
 
அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் வசதிபடைத்த ஏராளமானோர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்ததன் மூலம் அரசால் ரூ.4,166 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் வசதியற்ற ஏழைகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க முடிகிறது. இறக்குமதியை சார்ந்து இருப்பதை குறைக்கும் வகையில் உள்நாட்டில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்திக்கு ஊக்கம் அளிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
 
இதன்மூலம் இந்த துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்க முடியும். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். அதன்படி கடல், அதிக அழுத்தம், அதிக வெப்பநிலை கொண்ட பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துரப்பண பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். 
 
விலை நிர்ணயம், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால் விலை நிர்ணயம் நியாயமான அளவில் இருக்குமாறு அரசு பார்த்துக் கொள்ளும்.
 
அந்த வகையில் இந்த துறையில் ரூ.2 லட்சத்து 61 ஆயிரம் கோடி முதலீடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.
 
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2016–2017 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
 
அப்போது, நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்