விஷம் தடவிய கடிதங்கள்: இந்தியன் முஜாகிதீனின் திட்டம் அம்பலம்

வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (11:24 IST)
தங்களது கொலைப் பட்டியலில் உள்ளவர்களைக் கொல்வதற்கு, விஷம் தடவிய கடிதங்களை அனுப்ப இந்தியன் முஜாகிதீன் இயக்கம் திட்டமிட்டிருந்ததாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் சட்டவிரோதமாக ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை அமைத்த வழக்கில் இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை அமைத்தது தொடர்பான வழக்கில், இந்த 6 பேர் மீதும் துணை குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் மாநில காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

இதில் குற்றம் சாற்றப் டப்பட்ட 6 பேரில் தெசின் அக்தர், முகமத் அசார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, தங்களது கொலைப்பட்டியலில் உள்ளவர்களுக்கு மெக்னீசியம் சல்பேட், ஆமணக்கு விதை உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட விஷ கலவை தடவப்பட்ட கடிதங்களை அனுப்பி கொல்ல திட்டமிட்டதாக கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரணையில் தெரிவித்த விஷ கலவை முகமத் அசாரின் இருப்பிடத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்