74 சதவீத ஏழை, எளியோரின் வங்கிக் கணக்குகளில் பணம் இல்லை - மத்திய நிதி அமைச்சகம்

புதன், 19 நவம்பர் 2014 (12:16 IST)
ய்பிரதம மந்திரி ஜனதன யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் 74 சதவீதம் பேரின் வங்கிக் கணக்குகளில் பணம் இருப்பு இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
பிரதமர் நரேந்திர மோடி, 'ஜனதன யோஜனா திட்டம்' என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு டெபிட் கார்டுடன் (பற்று அட்டை) கூடிய வங்கிக் கணக்கு தொடங்குவதுடன், ஒரு லட்சம் ரூபாய் காப்பீடும் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள பதிலில், மொத்தமுள்ள 7 கோடியே 10 லட்சம் வங்கிக் கணக்குகளில், 5 கோடியே 30 லட்சம் வங்கிக் கணக்குகளில் பணம் இருப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.
 
அதாவது, கடந்த 7ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் பிரதம மந்திரி ஜனதன திட்டத்தின் கீழ் 7 கோடியே 10 லட்சம் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில், கிராமப்புறங்களில் 4 கோடியே 20 லட்சம் வங்கிக் கணக்குகளும், நகர்ப்புறங்களில் 2 கோடியே 90 லட்சம் வங்கிக்கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன.
 
இதன்படி, பிரதம மந்திரி ஜனதன திட்ட வங்கி கணக்குகளில் மொத்தம் 5 ஆயிரத்து 482 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழான கணக்குகளில் 5 கோடியே 30 லட்சம் வங்கிக்கணக்குகளில் பணம் இருப்பு இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்