அடுத்தது பினாமி சொத்துகள் மீது கை வைக்கும் பிரதமர் மோடி

ஞாயிறு, 13 நவம்பர் 2016 (18:44 IST)
அடுத்த கட்டமாக பினாமி சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


 

கோவாவில் எலக்ட்ரானிக் நகரத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மக்களை எவ்வளவு கஷ்டப்படுத்தும் என எனக்கு நன்றாக தெரியும். நாட்டில் உள்ள அனைத்து நேர்மையான மக்கள் இந்த கஷ்டமான சூழ்நிலையை 50 நாட்களுக்கு பொறுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் நான் ஏதாவது தவறு செய்திருந்தால், இந்த நாடு எனக்கு கொடுக்கும் தண்டனையை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் இந்தியாவை ஊழலற்ற நாடாக நிச்சயம் மாற்றுவேன்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ”எனது வீடு மற்றும் குடும்பத்தை விட்டுவிட்டு இந்த நாட்டிற்காக பணியாற்றுகிறேன். நாட்டின் உயர் பதவிக்கான நாற்காலியில் உட்கார நான் பிறக்கவில்லை. நம்முடைய இளைஞர்களின் எதிர்காலத்தை நாம் ஏன் நிலையற்ற நிலையில் வைக்க வேண்டும்.

இந்த அறிவிப்பால், பெரும் ஊழல் செயல்களில் ஈடுபட்டவர்கள் கூட ஏடிஎம் மையங்களில் 4000 ரூபாய் எடுப்பதற்காக வரிசையில் நிற்கின்றனர். கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான இந்த நடவடிக்கையை அடுத்து பினாமி சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்