துயரப்படும் மக்களுக்கு வாழ்த்துக்கள் கூறிய பிரதமர் மோடி!

திங்கள், 28 நவம்பர் 2016 (13:32 IST)
ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் திட்டத்தின் மூலமாக இடர்களை சந்திக்கும் மக்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


 

கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதோடு, 70க்கும் மேற்பட்ட உயிரழிப்புகள் ஏற்பட்டன. மேலும், இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், மனதோடு பேசுவேன் [மன் கி பாத்] என்ற வானொலி நிகழ்ச்சியில் நேற்று ஞாயிறன்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என்று அறிவிப்பின் மூலம், 50 நாட்கள் இதனால் கஷ்டம் இருக்கும் என்று ஏற்கெனவே தெரிவித்து இருந்தேன்.

இந்த அறிவிப்பால் இடர்களை சந்திக்கும் மக்களுக்கு தனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். ஜன்தன் என்ற அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டத்தை துவக்கியபோது வங்கி பணியாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டார்கள். அதேபோல இப்போதும் கஷ்டப்படுகிறார்கள்.

அவர்களுடைய பணி பாராட்டத்தக்கது. சில கறுப்புப் பண பேர்வழிகள் ஏழைகளை பயன்படுத்தி தங்களது பணத்தை மாற்றுகின்றனர். ஏழைகளின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்; அவர்களை சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்.

பினாமி சொத்துக்கள் ஒழிப்பு தொடர்பாக கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது அமலுக்கு வரவுள்ளது. இதனாலும் நிறைய கஷ்டம் வரும். விவசாயிகளும் இதனால் இடருக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு என் வணக்கம். இயற்கை இடரானாலும், இத்தகைய இன்னலானாலும் அதை சகித்துக் கொண்டு வாழ்பவர்கள் விவசாயிகள்.

சிறிய வணிகம் செய்பவர்கள் டிஜிட்டல் உலகத்திற்குள் நுழைய வேண்டும். மொபைல் போன் மூலமாக வங்கிகளின் விண்ணப்பங்களை இறக்கி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் வணிகம் செய்ய வேண்டும். மிகப் பெரிய மால்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை போல சிறு பெட்டிக்கடைகளும் கூட இந்த தொழில்நுட்பத்திற்கு மாற வேண்டும்.

ரொக்கப் பணத்தை கையாளாமல் வியாபாரம் செய்து பழக வேண்டும். இதனால் சிறப்பான வாழ்க்கை அமையும். இனிமேல் ஆன்லைன் மூலம் பயணச் சீட்டு உள்பட அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்