தமிழகத்திற்கு வருகிறார் நரேந்திர மோடி : தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

புதன், 27 ஜனவரி 2016 (08:42 IST)
பிரதமர் மோடி பிப்ரவரி மாதம் தமிழகம் வர இருப்பதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


 

 
67-வது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழக பாஜக சார்பில், சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்கு தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
 
அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் “2016-ல் தமிழகத்தில் பாஜக-வின் அங்கம் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற அளவில் எங்கள் கட்சி பணியை நாங்கள் செய்து வருகிறோம். 
 
சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் அந்த மாணவிகள், எங்கெல்லாம் மனு கொடுத்தார்கள். அந்த புகார்களின் அடிப்படையில் மாநில, மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றி தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். 
 
மேலும் கூறும்போது “பிப்ரவரி 2ஆம் தேதி பாஜக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை கோவையில் நடத்த நாங்கள் விரும்பினோம். அதற்காக பிரதமர் மோடியை அழைத்தோம். அவரும் வருவதாக ஒப்புக்கொண்டார். எனவே அன்று மோடி கோவை வருகிறார். இது தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும்” என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்