மக்களுக்கு மோடி அரசு எதுவும் செய்யவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதன், 10 டிசம்பர் 2014 (08:32 IST)
நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 6 மாதங்களாக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.
 
கேரள மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த ஒரு மாதமாக மக்கள் விழிப்புணர்வு யாத்திரை நடத்தப்பட்டது. அதன் நிறைவு விழா திருவனந்தபுரத்தில் நடந்தது.
 
அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.
 
அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:–
 
நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த சில மாதங்களாக பொதுத்தேர்தல் நடந்த மாநிலங்களில் எல்லாம் மதத்துவேசத்தை பரப்பியது.
 
உத்தரபிரதேசம், மராட்டியம், ஹரியானா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் கலவரம் நடைபெற்றது. மக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற திட்டம் இந்த அரசிடம் இல்லை.
 
இதன் விளைவு மக்களிடையே மதச்சண்டைகள் நடக்கிறது. ஒரு தரப்பு மக்களின் ஆதரவு மட்டும்தான் இந்த அரசுக்கு உள்ளது.
 
தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மோடி அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்கள் அறிவித்த திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.
 
100 நாட்களில் கருப்புப் பணத்தை முழுமையாக மீட்டு வருவோம் என்றார்கள். இதுவரை ஒரு ரூபாய் கூட வந்து சேரவில்லை. இதுபற்றி கேட்டால், மவுனம்தான் பதிலாக கிடைக்கிறது. இந்த அரசிடம் ஏமாற்றம் அடையும் மக்கள் மீண்டும் காங்கிரஸ் பக்கம் சாய்வது உறுதி. இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்