மகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ஒரு அவல நிலையா?
திங்கள், 17 ஜூலை 2017 (16:19 IST)
மரணமடைந்த தனது மகளின் இதயத்தை கடந்த 5 வருடங்களாக ஒரு பெற்றோர் தேடிவரும் அவல நிலை மும்பையில் நிகழ்ந்து வருகிறது.
மும்பையில் லோகேஸ்வரி பகுதியில் வசிப்பவர்கள் ஜியா ஹாசன் மற்றும் நாகினா ஹாசன் தம்பதி. இவர்களின் மகள் சனம் ஹாசன்(19). 2012ம் ஆண்டு, சனம் ஹாசன் புனேவில் உள்ள கல்லூரியில் படித்து வந்த போது, அவர் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும், அதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்தம் நின்று போனதோடு, அவர் கற்பழிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினர். ஆனால், இதை அவரின் பெற்றோர்கள் ஏற்கவில்லை.
ஏனெனில், கால்பந்து வீரங்கனையான அவருக்கு மதுப்பழக்கம் துளியும் கிடையாது. மேலும், இறந்த அன்று காலை கூட அவர் நன்றாக உடற்பயிற்சி செய்தார் எனவும் அவரின் பெற்றோர்கள் கூறினர். மேலும், இதுபற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அவரின் இதயத்தை பரிசோதித்த சிபிஐ, அந்த இதயம் ஒரு பெண்ணின் இதயமே அல்ல.. அது ஒரு ஆணின் இதயம் என குண்டை தூக்கி போட்டது. இது அவரின் பெற்றோருக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. அப்படியெனில் எங்கள் மகளின் இதயம் எங்கே என அவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் பதில் இல்லை.
இதையடுத்து, டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அடுத்த அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இதயம் பெண்ணுடையதுதான். ஆனால், அது ஒரு வயதான பெண்ணின் இதயம் என அறிக்கை வந்தது.
செல்வாக்கு மிக்க ஒருவருக்காக, எங்களின் மகளை கொலை செய்து, அவரின் இதயத்தையும் எடுத்துள்ளனர். மருத்துவர்களை கையில் போட்டுக்கொண்டு எங்கள் பெண்ணின் இதயத்தை அவர்கள் மாற்றி வைத்துள்ளனர். எங்கள் மகளின் இறப்பில் நிச்சயமாக ஒரு விஐபி நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ளார் என அவர்கள் கூறி வருகின்றனர்.
தங்கள் மகளின் இதயம் எங்கே போனது என்பதை அறிய, ஒரு பெற்றோர் கடந்த 5 வருடமாக போராடி வருவது, எல்லாவற்றையும் விட கொடூரமான அவல நிலையாகும்.