எங்களின் அன்பிற்கினிய பிரதமர் அவர்களுக்கு

வியாழன், 14 ஜூலை 2016 (11:46 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தின் போது காந்தியை மகாத்மாவாக மாற்றிய பிரிட்டோரிய நகர் தொடர் வண்டியில் பென்ரிட்ஸ்க்கும் பீட்டர்மரிட்ஸுக்கும் இடையே காந்தியைப் போல பயணம் செய்ததாக அறிகின்றோம்.


 


இந்தப் பயணத்தை தீர்க்க யாத்திரைக்கான பயணம் என்று மெய்சிலிர்த்து குறிப்பிட்டு இருக்கிறீர்கள். எங்களின் பிரதமர் காந்தியைப்போல பயணம் செய்தார் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால் பெருமை அல்ல, எங்களின் பிரதமர் காந்தியத்தை செயல்படுத்தினார் என்பதில் தான் எங்களின் பெருமை உள்ளது.  

எங்களின் அன்பிற்கினிய பிரதமர் அவர்களே

முதலீடுகளைத் திரட்டவும் தொழில் வர்த்தக உறவுகளுக்காகவும் தாங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வது எங்களுக்கு மகிழ்ச்சியே. கடந்த ஓர் ஆண்டு மட்டும் ஏர்இந்தியாவில் நீங்கள் பயணம் செய்த 22 நாடுகளின் பயண செலவுமட்டும் 117 கோடி. மத்திய பாதுகாப்புதுறை அதிகாரிகள் தங்கள்  வெளிநாட்டு பயணக்களுக்காக 2000 கோடி மதிப்புள்ள போய்ங் 777-300 அதிநவீன பாதுகாப்புடன் கூடிய அமெரிக்க அதிபரின் விமானத்திற்கு இணையான பரிந்துரை செய்து இருக்கிறார்கள் என அறிகிறோம். இது நிஜம் ஆனால், எங்களின் பிரதமர் விலையுயர்ந்த வாகனத்தில் பயணிப்பதும் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால் இந்தியாவின் இதயத் துடிப்பான கிராமக்களுக்கும் உங்களின் பயணம் அவசியம் பிரதமரே, இந்த கிராமங்களில் தான் காந்தியின் ஆத்மா மட்டுமல்ல இந்த தேசத்தின் ஆத்மாவும் உள்ளது. வாருங்கள் பிரதமர் அவர்களே. 

எங்களின் பெரும் மதிப்பிற்குரிய  பிரதமர் அவர்களே

வெளியுறவுத்துறை அமைச்சக தகவலின்படி கடந்த மார்ச் மாதம்வரை நட்பு  ரீதியாக வெளிநாட்டு பயணங்களின்போது நீங்கள் பெற்ற பரிசு பொருட்களின் எண்ணிக்கை 25. விதர்பாவிலும், தெலுங்கனாவிலும், கர்நாடகாவிலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் கிராமங்களுக்கும் வர வேண்டும். நிச்சயம் அவர்களிடம் உங்களுக்கு பரிசுகள் தர பணம் இருக்காது. ஆனால் கிருஷ்ணனை பார்க்க வந்த குசேலனைப் போல சில அவல் தந்து தங்களின் அன்பை பகிர்வார்கள். ஆகவே நிச்சயம் வாருங்கள் பிரதமர் அவர்களே.

எங்களின் பெரும் சிறப்பான பிரதமர் அவர்களே

தேசப்பிதாவின் 145 வது பிறந்த நாளின் போது தங்களால் தொடக்கப்பட்டத் திட்டம் தூய்மை இந்தியா. திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிதி அவசியம் தான். அனைத்து அரசுகளும் வரிகளின் மூலம்தான் நிதிகளை பெறுகின்றன. இருந்த போதும் திட்டத்திற்கான அதிகப்பட்ச 0.5% சேவை வரியை எங்களின் பாக்கெட்டிலிருந்து எடுப்பதுதான் வினோதமாக உள்ளது. இந்தியா தூய்மை பெற வேண்டும். ஆனால் அதற்கான வரி பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட வேண்டும். உங்களுக்கு ஐயம் இருந்தால் காந்தியின் ஆத்மாவிடம் கேளுங்கள், அது சொல்லும் எங்களின் வரி வேதனைகளை பிரதமர் அவர்களே. 

எங்களின் உயரிய பிரதமர் அவர்களே

குறைந்தப்பட்ச அதிகாரம், அதிகபட்ச ஆளுமை என்ற உங்களின் முழக்கம் கிராமப் பொருளாதாரத்தின் மூலமே சாத்தியம் என்பதை அறியாதவர் அல்ல தாங்கள். கடந்த ஆண்டைவிட அதிகம் இல்லை பிரதமர் அவர்களே 6904 கோடிதான் குறைவாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கி இருக்கிறீர்கள் அம்பானிகளுக்கு மட்டும் உங்களின் கஜனா கதவுகளைத் திறக்கும் நீங்கள் கிராமங்களுக்கு ஏன் ஜன்னல் கதவுகளைக்கூட திறப்பது இல்லை? கதவை திறங்கள், காற்று மட்டும் அல்ல காந்தியின் ஆசிர்வாதமும் வரும் பிரதமர் அவர்களே.

எங்களின் சீர்மிகு பிரதமர் அவர்களே

நாடாளுமன்ற தேர்தலின் போது வளர்ச்சி, மாற்றம், முன்னேற்றம் என்றீர்கள். பிறகு ஊழல் இல்லாத இந்தியா என்றீர்கள். தேர்தலுக்கு பின் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்றீர்கள். தற்போது உங்களின் சாத்விகள் முஸ்லீம்கள் இல்லாத இந்தியா என்கிறார்கள். இன்னும் சில நாட்கள் கழித்து மிஷனரிகள் இல்லாத இந்தியா, கம்யூனிஸ்ட்கள் இல்லாத இந்தியா, திராவிடர்கள் இல்லாத இந்தியா என்றும் கூட சொல்வார்கள். அப்போதும் நீங்கள் வாய் மூடி தான் இருப்பீர்கள். காந்தி இல்லாத இந்தியா, எப்படி சாத்தியம் இல்லையோ, அதுப்போல முஸ்லீம்கள், கம்யூனிஸ்ட்கள், திராவிடர்கள் மற்றும் கிறித்துவர்கள் இல்லாத இந்தியா சாத்தியமே இல்லை. நீங்கள் தோற்கடிக்கவே முடியாதவர் அல்ல என்பதை பிஹார் டெல்லிமக்கள் உறுதி செய்து உள்ளன. ஆகவே சாமானியன் சொல்கிறேன் காந்தியம் பேசுங்கள், காந்தியம் செய்யுங்கள் பிரதமர் அவர்களே.

இரா .காஜா பந்தா நவாஸ் , பேராசிரியர் 
இயந்திரவியல் துறை ,
சத்தியபாமா பல்கலைக்கழகம் ,
சென்னை



 

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்