புதுவை அரசியலில் திருப்பம் : ஜெயலலிதாவை சந்திக்கும் ரங்கசாமி

புதன், 8 ஜூன் 2016 (11:19 IST)
புதுச்சேரி அரசியலில் திடீர் திருப்பமாக, என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.


 

 
2011ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ரங்கசாமி, என்.ஆர்.காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தார்.
 
ஆனால், தனிப் பெரும்பான்மை கிடைத்ததால், அதிமுகவை கழற்றிவிட்டார். இதனால் அதிமுகவின் எதிரியாக பார்க்கப்பட்டார் ரங்கசாமி. இருந்தாலும், சமீபத்தில் காலியான ராஜ்யசபா எம்.பி.பதவியை அதிமுகவிற்கு விட்டுக் கொடுத்தார். இதனால் இரு கட்சிகளுக்கிடையே ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டது.
 
இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டது. பிரச்சாரத்தின் போது, ரங்கசாமியை துரோகி என்று விமர்சித்தார் ஜெயலலிதா. 
 
தேர்தலின் முடிவில், அதிமுக 4 இடங்களையும், என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களையும் பெற்றது. காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைத்து 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. 
 
அதிமுகவோடு கூட்டணி அமைத்திருந்தால் ஆட்சியை பிடித்திருக்கலாம் என என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கருதுகின்றனர். வருங்காலத்தில் அதிமுகவின் உதவி தேவை என்பதை தற்போது ரங்கசாமிக்கும் புரிந்துள்ளது. 
 
மேலும், காங்கிரஸ் சார்பாக புதுச்சேரி முதலமைச்சராக நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை என்.ஆர்.காங்கிரஸுக்கு இழுத்து, கூடவே அதிமுகவின் ஆதரவையும் பெற்றுவிட்டால், மீண்டும் அங்கு ஆட்சி அமைக்க முடியும் என்று ரங்கசாமி கருதுவதாக தெரிகிறது.
 
எனவே, ஜெயலலிதாவை சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் ரங்கசாமி. ஓரிரு நாளில் அவர்களின் சந்திப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்