மோடியின் திட்டத்தால் கருப்புப் பணம் ஒழியாது - ப.சிதம்பரம் கருத்து

புதன், 9 நவம்பர் 2016 (17:38 IST)
நேற்று இரவு முதல் மக்கள் கையில் இருக்கும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளார். மேலும், அந்த நோட்டுகளை வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.


 

 
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் ஒருபக்கம் இருந்தாலும், ஒருபக்கம் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. 
 
இதுபற்றி கருத்து தெரிவித்த முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினருமான ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
மோடியின்  இந்த அறிவிப்பால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. கருப்பு பணம் வைத்திருப்பவர்களை நான் ஒரு போதும் ஆதரித்ததில்லை. ஆனால், 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்பது என் கருத்து. எனெனில், 15 லட்சம் கோடி அளவிற்கு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது.
 
அரசின் நடவடிக்கையால் அவ்வளவு பணமும் எப்படி சிக்கும்?. 40 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.500 நோட்டுகள் உயர் மதிப்பாக இருந்தது. ஆனால் தற்போது அனைவரிடமும் ரூ.500 நோட்டு எல்லோரிடமும் இருக்கிறது. 
 
மேலும், இதுபோல் உயர் மதிப்புடைய நோட்டுகள் செல்லாது என்று 1948ம் ஆண்டிலேயே அரசு அறிவித்தது. ஆனால் அதில் எந்த பயனும் ஏற்படவில்லை.  
 
என்று அவர் கூறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்