நிதிஷ்குமார் ராஜினாமா முடிவில் மாற்றம் இல்லை - சரத் யாதவ்

திங்கள், 19 மே 2014 (14:56 IST)
பீகார் முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ்குமார் விலகியது இறுதியானது. அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவில்லை. ராஜினாமா முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அந்த கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பீகார் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்.
 
இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பாட்னாவில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நிதிஷ் குமாரே முதலமைச்சராக தொடர வேண்டும் என்றும், ராஜினாமா முடிவை அவர் கைவிட வேண்டும் என்றும் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து இறுதி முடிவு எடுக்க நிதிஷ்குமார் ஒருநாள் அவகாசம் கேட்டிருந்தார்.
 
இந்த நிலையில் நிதிஷ்குமாரின் ராஜினாமா முடிவு இறுதியானது. அவரது முடிவில் மாற்றம் இல்லை என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவர் சரத்யாதவ் இன்று அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
 
பீகார் முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ்குமார் விலகியது இறுதியானது. அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவில்லை. ராஜினாமா முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டின் நலனுக்காகவும், கட்சியின் நலனுக்காகவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு கடினமான முடிவுதான். ஆனால் இறுதியானது. சரியானது என்று அவர் கூறியுள்ளார்.
 
ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று பிற்பகல் பாட்னாவில் நடக்கிறது. நிதிஷ்குமாரின் ராஜினாமா முடிவில் மாற்றம் இல்லை என்பதால் இந்த கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. நிதிஷ்குமார் கூறும் ஒருவரே ஒருமனதாக தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
 
இதற்கிடையே ஐக்கிய ஜனதாதளம் கட்சி, காங்கிரசின் ஆதரவை நாடியதாகவும், லல்லு பிரசாத் யாதவையும் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்