முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார்; திரும்பப்பெற மறுப்பு!

திங்கள், 19 மே 2014 (17:56 IST)
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், ராஜினாமாவை வாபஸ் பெற மறுத்துவிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் படுதோல்வியைச் சந்தித்ததையடுத்து, நிதிஷ்குமார் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று அவர் தனது ராஜினாமா இறுதியானது என்றும், ராஜினாமா செய்ததைத் திரும்பப் பெற இயலாது என்றும் கூறினார்.
 
இதுகுறித்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மாநிலத் தலைவர் நரைன் சிங் செய்தியாளர்களிடையே கூறுகையில், "நிதிஷ்குமார் தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற மறுத்துள்ளதால் அவரே புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்குமாறு ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் சட்டமன்றக்குழு ஏகமனதாக கோரியுள்ளது" என்றார்.
 
"இது தொடர்பாக இன்று மாலை ஆளுநர் பாட்டீலை கட்சித் தலைவர் சரத் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் சந்தித்து முடிவைத் தெரிவிப்பார்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
இதனிடையே, "தோல்விக்குப் பொறுப்பேற்று நிதிஷ் குமார் ராஜினாமா செய்தாலும் சட்டசபையில் ஐக்கிய ஜனதாதளத்திற்கு தனிப்பெரும்பான்மை உள்ளது. எனவே ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. மேலும் 2015 சட்டசபைத் தேர்தலிலும் நிதிஷ் குமாரே கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்பார்" என்று சரத் யாதவ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்