நோன்பு இருந்தவர் வாயில் உணவு திணித்த விவகாரம்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மீது நிதின் கட்கரி பாய்ச்சல்

சனி, 26 ஜூலை 2014 (18:30 IST)
மகாராஷ்டிரா சதான் சம்பவத்தை அரசியலாக்கி, பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு களங்கம் விளைவிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சதி செய்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம்சாற்றியுள்ளார்.
 
ரம்ஜான் நோன்பு இருந்தவர் வாயில் சிவசேனா எம்.பி. வலுக்கட்டாயமாக உணவை திணித்ததாக எழுந்த புகார் கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் புயலைக் கிளப்பியது.
 
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக அமைச்சர் நிதின் கட்கரி: ”மகாராஷ்டிரா சதான் சம்பவத்தை அரசியலாக்கி, பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு களங்கம் விளைவிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சதி செய்கின்றன.
 
மகாராஷ்டிரா சதான் சம்பவம், மாநில அரசு விருந்தினர் மாளிகையில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதை எதிர்க்கும் வகையில், சிவசேனா எம்.பி. மேற்கொண்ட நடவடிக்கை. இதில் மதச்சாயம் பூசி அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றன காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள்.
 
இவ்விரு கட்சிகளும் எப்போதுமே மதவாதம், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் வாக்கு வங்கி அரசியல் நடத்த முற்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சியின் காரணமாகத்தான், நாட்டில் பட்டினிச் சாவுகள், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்தன" என குற்றம்சாற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்