’பரிசோதனைக்கு உட்படுத்தாமல் மேகி நூடுல்ஸை அழித்து விட்டது’ - நெஸ்லே மீது குற்றச்சாட்டு

வியாழன், 30 ஜூலை 2015 (12:36 IST)
நெஸ்லே நிறுவனம் மேகி உணவுப் பொருட்களை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அழித்து விட்டது என்று மகாராஷ்டிர மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது.
 

 
நெஸ்லே இந்தியா நிறுவனம் மேகி நூடுல்சிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.
 
இந்நிலையில் நேற்று மகாராஷ்டிர மாநில அரசு தரப்பு கூறுகையில், “நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி உணவுப் பொருளுக்கு மகாராஷ்டிர மாநில அரசு தடைவிதித்துள்ள நிலையில் அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் வேகவேகமாக அந்த நிறுவனம் அழித்துவிட்டது” என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. மேலும், அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேகிக்கு தடைவிதிக்கப்பட்டது சரியே என்று வாதிட்டார்.
 
ஆனால், இந்த குற்றச்சாட்டை மேகி நிறுவனம் மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ’மேகி தயாரிப்பு ஆபத்தானதல்ல. மராட்டிய மாநில மேகி பாக்கெட்டுகள் அனைத்தும் தீங்கானவை அல்ல என்றும் சில பாக்கெட்டுகள் கெட்டுப் போயிருக்கலாம்’ என்றும் கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்