நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

சனி, 13 பிப்ரவரி 2016 (09:57 IST)
நேஷனல் ஹெரால்டு வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு விலக்கு அளித்தும் அதே சமயம் இந்த வழக்குக்கு தடை விதிக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பின்னர் நஷ்டத்தில் இயங்கியது.
 
இதை சரிகட்ட அந்த பத்திரிகை நிர்வாகம் கடன் வாங்கியது. இந்த கடனை அடைக்க முடியாமல் அந்த பத்திரிகை தவித்த போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் கட்சி பணத்தை கொடுத்து கடனை அடைத்தனர்.
 
இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான "அசோசியேட் ஜர்னல்ஸ்" நிறுவனத்தின் சொத்துகளை "யங் இந்தியன்" என்ற நிறுவனத்தின் மூலம் முறைகேடாக கையகப்படுத்தியதாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, பொதுச்செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோருக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆஜராகி ஜாமீன் பெற்றனர்.
 
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு 20 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றும், இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்தனர்.
 
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.எஸ்.கெகர், சி.நாகப்பன் ஆகியோர் விசாரித்தனர்.
 
இது குறித்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:–
 
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றச்சாட்டை மறுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு. எனவே இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் அகற்றப்படுகிறது.
 
சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
 
எனவே சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் 20 ஆம் தேதி நேரில் ஆஜராக தேவையில்லை.
 
ஆனால் நீதிமன்றம் விரும்பினால் அனைவரும் உரிய நேரத்தில் ஆஜராக தயாராக இருக்க வேண்டும்.
 
அதேசமயம் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. விசாரணை தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்