முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்ய கேரளா முடிவு

வியாழன், 8 மே 2014 (12:16 IST)
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட உயரத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.
119 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசு பிறப்பித்த சட்டம் செல்லாது எனவும், அணையின் நீர்மட்ட உயரத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் நேற்று அதிரடியாக தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு கேரள அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
 
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி திருவனந்தபுரத்தில் அமைச்சரவை கூட்டத்தை அவசரமாக கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தார்.
 
இந்த கூட்டத்திற்கு பின்னர், உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க கேரளா ஒருபோதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. எங்களுக்கு உள்ள கவலையெல்லாம் அணையின் பாதுகாப்பு பற்றியதுதான். இதனால்தான் 2006 ஆம் ஆண்டு இது தொடர்பாக சட்டசபையில் அணை பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், அணையின் பாதுகாப்பு பற்றிய உண்மையான கவலைகளை உச்சநீதிமன்றம் பரிசீலிக்கவில்லை.

மேலும், 5 மாவட்டங்களில் சுமார் 40 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
 
இந்த பிரச்சனையில் மாநிலத்தில் அனைத்து கட்சிகளிடையேயும் ஒருமித்த கருத்து நிலவுகிறது. விரைவில் அனைத்து கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டி விவாதிப்போம்.
 
இடுக்கி மாவட்ட விவசாயிகள் இந்த பிரச்சனையில் உணர்ச்சிவசப்படக் கூடாது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசு உணர்ச்சிவசப்படாத இதே நடைமுறையைத்தான் பின்பற்றி வருகிறது. எனவே தொடர்ந்து அதே அணுகுமுறையை நாம் பின்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. இடுக்கி, பத்தனம் திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த 40 லட்சம் மக்களின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தை ஒத்துக்கொள்ள செய்யும் அளவுக்கு கேரள அரசு தனது வாதத்தை எடுத்து வைக்க தவறிவிட்டது” என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்