வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு முஸ்லிம் அமைப்பு ஆதரவு

புதன், 30 ஏப்ரல் 2014 (10:59 IST)
வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய்க்கு முக்கிய முஸ்லிம் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக காங்கிரஸும், இது மோடியின் வெற்றி வாய்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது என்று பாஜகவும் கருத்து தெரிவித்துள்ளன.
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தொகுதியில் களம் இறங்கியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக அஜய்ராய் போட்டியிடுகிறார். தற்போதைய எம்.எல்.ஏ.வான இவருக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
 
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அமோக வெற்றி பெறுவார் என்று அந்த கட்சியினர் கூறி வருகிறார்கள். அவரது வெற்றியை தடுப்பதற்காக அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த தொகுதியில் 43 பேர் வேட்பாளர்கள் நிற்கிறார்கள். இதனால் கடும் போட்டி நிலவுகிறது.
 
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய்க்கு ஆதரவு அளிப்பதாக, முக்கிய முஸ்லிம் அமைப்பான முக்தா அன்சாரியின் 'கியாமி எக்தா தளம்' அறிவித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் இதை வரவேற்றுள்ளார். மதசார்பு கொண்ட சக்திகளை எதிர்க்க பக்கபலமாக அமையும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
 
'கியாமி எக்தா தளம்' அமைப்பின் தலைவர் முக்தர் அன்சாரி 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக, பாஜகவின் தற்பேதைய எம்.பி. முரளிமனோகர் ஜோஷியை எதிர்த்து போட்டியிட்டவர். அப்போது 1 லட்சத்து 80 ஆயிரம் ஓட்டுகள் பெற்று இவர் 18 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
 
எனவே இப்போது 'கியாமி எக்தா தளம்' காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராயை ஆதரிப்பது காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. ஆனால், அன்சார் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்திருப்பதால் பாஜகவின் வெற்றி வாய்ப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பாஜக தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்