‘மோடி இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது’ – ராஜீவைத் தாக்கிய சிப்பாய் எச்சரிக்கை

வெள்ளி, 13 மார்ச் 2015 (15:04 IST)
நரேந்திர மோடி இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக்கூடாது என்று, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கை கடற்படைச் சிப்பாய் விஜித ரோகண விஜேமுனி தெரிவித்துள்ளார்.

 
இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம், இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக மேற்கொண்டார். அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
 
அந்த அணிவகுப்பில் கலந்துகொண்ட ராஜீவ் காந்தியை, கடற்படைச் சிப்பாயான, விஜித ரோகண விஜேமுனி துப்பாக்கியினால் தலையின் பின்புறமாகத் தாக்கியிருந்தார். எனினும் ராஜீவ்காந்தி சற்று நகர்ந்து கொண்டதால் பெரும் பாதிப்பில் இருந்து தப்பிக் கொண்டார்.
 
இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விஜித ரோகண விஜேமுனி, பின்னர் விடுவிக்கப்பட்டு, தற்போது நுகேகொடவில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விஜித ரோஹண விஜேமினி ராஜீவைத் தாக்கும் காட்சி
இந்நிலையில், அதற்குப் பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த பயணம் குறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கருத்து தெரிவித்துள்ள விஜித ரோகண விஜேமுனி, “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நான் விரும்புகிறேன்.
 
அவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு நல்ல மனிதர். ஆனால் அவர், எமது நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது. அவர் எங்களது பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும்.
 
ராஜீவ்காந்தி போன்று அவரும் தலையீடு செய்ய முனைந்தால், தமிழர் பிரச்சினை திரும்பவும் ஆரம்பமாகும். ஆயிரக்கணக்கான இலங்கைப் படையினரும், 1500 இந்தியப் படையினரும், போரில் மரணமாகியுள்ளனர்.
 
மோடி இலங்கை அரசாங்கத்துடன் உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டும். அமைதியைப் பேண வேண்டும். போர் முடிவுக்கு வந்த பின்னர், இங்கு அமைதி நிலவுகிறது. தமிழர்கள் மீன்பிடிக்கிறார்கள், விவசாயம் செய்கிறார்கள். பொருளாதாரமும், சுற்றுலாத்துறையும் நன்றாக இருக்கிறது.
 
அவர்களுக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்று, தலையீடு செய்யக் கூடாது என்று நீங்கள் அவருக்கு கூற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்