இந்தியா - சீனாவில் உலகின் 35 சதவீத மக்கள் - சீனப் பத்திரிகையாளர்களிடம் மோடி பேச்சு

செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (19:45 IST)
சீனப் பத்திரிகையாளர்களைப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (செப்.16) புதுதில்லியில் சந்தித்தார். 
 
இச்சந்திப்பின் போது பிரதமர் மோடி தெரிவித்ததாவது:-
 
வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகிய விஷயங்களில் இந்தியாவும் சீனாவும் இணைந்துள்ளன. இரு நாடுகளும் இணைந்து மக்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். இந்தியா - சீனாவுக்கு இடையேயான உறவு வெகுவாக வளர்ந்துள்ளது. இந்த உறவின் வளர்ச்சி மனிதத் தன்மையின் வரலாற்றை மாற்றி அமைக்கும். மேலும், இந்தக் கிரகத்தையே சிறப்பாக மாற்றி அமைக்கும். இந்தியாவும் சீனாவும் இணைந்து பல மைல் கற்களை ஒன்றாகக் கடக்கும் என்று நான் நம்புகிறேன். பல மைல்களைக் கடப்பதன் மூலம் இரு நாடுகள் மட்டுமின்றி ஆசியாவும் மொத்த மக்களினமும் வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்திற்கான பாதையை நோக்கி முன்னேறும்.
 
இந்தியா மற்றும் சீனாவின் பெரும் மக்கள் தொகையைக் குறித்துப் பேசுகையில் இந்தியாவும் சீனாவும் பயன் பெற்றால் உலகின் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் மக்கள் பயன் பெறுகின்றனர். அதே போல இந்தியா - சீனாவின் உறவு வலுப்பட்டால் உலகின் 35 சதவீத மக்கள் நெருக்கமாகிறார்கள். இந்தியா - சீனாவின் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்தால் உலக மக்கள் தொகையில் 35 சதவீத மக்கள் தொகையின் வாழ்வாதாரம் தரமான மாற்றத்தை அடையும். இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் மூலம் புதிய வரலாற்றை உருவாக்கி, மனித குலத்திற்குச் சிறந்த வருங்காலத்தையும் உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
 
இவ்வாறு பிரதமர் தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்